சேலம்: ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் என்ற பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் வெங்கடேசன் கூறுகையில், "தெடாவூர் பகுதியில் உள்ள அழகுவேல் என்ற உழவனின் நிலத்தில் முதுமக்கள் தாழி கிடைத்தது. இது 2500 ஆண்டுகள் பழமையானது. தாழியின் மேல் பகுதி உடைந்துள்ளது. பானை ஓட்டின் தடிமன் ஒரு அங்குல அளவு உள்ளது.
பெருங்கற்கால மனிதர்கள்
பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்களின் உறவினர்களில் இறந்தவர்களின் உடலையோ அல்லது அவர்களின் எலும்புகளையோ பெரிய அளவிலான பானைகளில் வைத்து மண்ணுக்குள் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.
அதன் மீது பெரிய கற்களைக் கொண்டு வட்ட வடிவில் அமைந்த கல் வட்டத்தையும், பலகைக் கற்களைக் கொண்டு கல் திட்டைகளையும் அமைத்துவந்தனர். இந்தக் காலத்தைதான் வரலாற்று ஆய்வாளர்கள் பெருங்கற்காலம் என்று அழைக்கிறார்கள். குறிப்பாக 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பழக்கமாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு, சிவப்பு நிறங்களைக் கொண்ட பானை ஓடுகள் உடைந்த நிலையில் இங்கே உள்ள சிறிய மலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
இதையும் படிங்க: நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்