சேலம்: சேலம் மாவட்டம் வட பர்கூர் வனப்பகுதி, சென்னம்பட்டி வனச் சரகத்தையொட்டி பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அவ்வப்போது யானைகள் உணவு தேடி வரும். இந்தநிலையில், நேற்று (ஏப்ரல் 4) வனப்பகுதியிலிருந்து வெளியேறி தண்ணீர் தேடி வந்த 15 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை ஒன்று, மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மயில்சாமி மேட்டூர் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டூர் வனத்துறையினர் மற்றும் ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வட பர்கூர் காப்புக்காடு வனத்துறையினர் யானையை கிரேன் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வனத்திலிருந்து வெளியேறி யானைகள் விளை நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு யானைகள் விளை நிலங்கள், ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் செயற்கை மழை - கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி