ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தோப்புக்கனா பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி. தம்பதியருக்கு மிதுன்ராஜ் (9), கார்த்திகேயன் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பானுமதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பானுமதிக்கு வயிற்றில் நீர்க்கட்டி பிரச்னை இருப்பதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சேட்டுவுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக பானுமதி சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சேட்டு, பானுமதியின் கன்னத்தில் அறைந்து கழுத்தை நெரித்துள்ளார். இதில் நிலைகுலைந்து கட்டிலில் விழுந்த பானுமதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி உயிரிழந்ததை அறிந்த சேட்டு பதற்றத்துடன் வெளியே சென்றுள்ளார்.
பின்னர் ஒன்றும் தெரியாதது போல், பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மூத்த மகன் மிதுன்ராஜ் உள்ளே சென்று பார்த்த போது, தனது தாய் பேச்சு மூச்சின்றி கிடந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, பானுமதியை ஆற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சேட்டு, அவரை காப்பாற்றும்படி மருத்துவர்கள் முன் கண்ணீர் விட்டு கதறி நாடகமாடியுள்ளார்.
பானுமதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். ஆனால் அவர் உடலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் காயங்கள் இருந்ததால் ஆற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சேட்டு மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மனைவி பானுமதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
தனது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி பானுமதி தகராறு செய்ததாகவும், அப்போது ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டதாக, விசாரணையின் போது சேட்டு கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேட்டுவை கைது செய்த ஆற்காடு நகர போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோனிகா கலர் லேப் ஓனர் வீட்டில் கொள்ளை.. போக்குகாட்டிய பலே திருடன் சிக்கியது எப்படி?