ராணிப்பேட்டை: வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் பரிமேலழகர், இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி ஈஸ்வரி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பணியின் காரணமாக பரிமேலழகர் நேற்று (நவ. 2) காலை பைக்கில் கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது கலெக்டர் அலுவலக வாயிலில் எதிரே வேன் வந்ததால், இருசக்கர வாகனத்தை அலுவலகத்திற்கு வெளியவே நிறுத்திவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியர் அலுவலகத்திற்கு பிராணிகள் ஏதும் உள்ளே வராமல் இருக்க தரையோடு பதிக்கப்பட்டு இருந்த குழாய்களுக்கு இடையே பரிமேலழகன் கால் சிக்கிக் கொண்டது. வெளியே எடுக்க முயற்சித்தும் முடியாமல் அவர் தவித்து உள்ளார். பின்னர் அதனால் வலியால் அலறி துடித்ததாக அதை கண்டவர்கள் கூறுகின்றனர்.
இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, போலீசார் குழாய்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பரிமேலழகனை மீட்க முயற்சி செய்தனர். எவ்வளவோ முயற்சி செய்தும் போலீசாரின் முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த சம்பவம் குறித்து வேலூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி இரும்பு குழாய்களை வெட்டி அகற்றினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பரிமேலழகர் மீட்கப்பட்டார். இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கால் சிக்கிக் கொண்ட நிலையில், அப்போதும் குழாய் வெட்டி எடுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியர் அலுவலகத்திற்குள் கால்நடைகள் வராமல் தடுக்க நுழைவு வாயிலில் பதிக்கப்பட்ட குழாய்களால் பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த குழாய்களை நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு - தகவல்