வேலூர் மாவட்டம் லத்தேரி ரங்காப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யனாமூர்த்தி (28). ஆற்காடு நகர காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றிவந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் எல்லைப் பகுதியில் சக காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, தருமபுரியிலிருந்து கோயம்பேட்டிற்கு மலர் ஏற்றிச் சென்ற பிக்கப் டிரக் (Pickup Truck) ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காவலர்களை நோக்கிச் சென்றது.
அப்போது அங்கே இருந்த பேரிக்கேடின் (Barricade) மீது மோதியதில் அருகே நின்றுகொண்டிருந்த அய்யனாமூர்த்தி, காவல் ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் பலமாகத் தாக்கப்பட்டனர். இதில் அய்யனாமூர்த்திக்கு தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மேலும் ஆய்வாளர் ஆனந்தன் இடது காலில் முறிவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வாகனத்தை ஓட்டிவந்த தருமபுரி மாவட்டம் பனயார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (22) என்பவர் மீது ரத்தினகிரி காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தெடர்ந்து உயிரிழந்த அய்யனாமூர்த்தியின் குடும்பத்தினரை ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன், டிஎஸ்பி பூரணி, வேலூர் சரக டிஐஜி காமினி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். முதலமைச்சர் பழனிசாமி இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 15 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.