ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப பொங்கல் விழா, மாற்றுத்திறனாளி ஜோடிக்கு இலவச திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், ராணிப்பேட்டை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் குடும்ப பொங்கல் விழாவினை அவர்களுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடினர்.
மாற்றுத்திறனாளி தம்பதிக்குத் திருமணம்
அதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் திருச்சி மாவட்டம் மலையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிஅம்மாள் என்ற பெண்ணுக்கும் ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டது.
இந்தத் திருமண விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் தாலி கட்டி திருமண நிகழ்வானது நிறைவேறியது. கூடிநின்ற மாற்றுத்திறனாளி, அரசு அலுவலர்கள் தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:ஓபிஎஸ், ஓபிஆர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!