ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் 7 நடைமேடையில் நின்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் மீது ஏறி நடந்து கொண்டிருப்பதாக அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கீழே இறங்குமாறு கூறியபோது, அதை மறுத்த அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொள்வதை அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை பத்திரமாக மீட்கவேண்டுமெனில், முதலில் ரயில் பாதைக்கு மேலே செல்லும் உயர் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை முதலில் துண்டிக்க எண்ணினர்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மார்க் அவரிடம் பேச்சுக் கொடுத்தவாறே, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, மின்சார ரயில் அலுவலர்கள் உயரே சென்ற உயரழுத்த மின்சாரத்தை நிறுத்தினர்.
இதற்கிடையே அங்கிருந்த யாரும் எதிர்பாராத விதமாக, அந்த நபர் ரயில் பெட்டிகளின் மீது ஓடத் தொடங்கினார். பின்னர் செய்வதறியாமல் நின்றவர்களின் மத்தியில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மகாலிங்கம், ஜித்தேந்திரா மீனா மற்றும் ரயில்வே ஊழியர் பத்மநாபம் ஆகிய மூவரும் அந்த நபருக்கு தெரியாமல் ரயில் பெட்டியின் மேலே ஏறி அவரை, இலகுவாகப் பிடிக்க முயற்சித்தனர். இதை அறிந்த அந்த நபர், திடீரென கீழே குதிக்க முற்பட்டார்.
இதனிடையே, மேலே இருந்த மூவரும் அவரை கனக்கச்சிதமாகப் பிடித்து பத்திரமாகக் கீழே இறக்கினர். அந்த நபரை சுமார் 3 மணி நேரம் வரைப் போராடி மீட்ட ரயில்வே அலுவலர்கள் அதன் பிறகே நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து அந்த நபரிடம் இருந்த சில ஆவணங்களைப் பார்த்தபோது, அந்த நபர் கடலூரில் உள்ள காட்டுமன்னார்கோயில் தாலுகாவிற்குட்பட்ட ஸ்ரீ புத்தூர் பகுதியைச் சார்ந்த 68 வயது மதிக்கத்தக்க இளங்கோவன் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததது.
ஒரு வழியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவரைப் பத்திரமாக மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது வீட்டில் உள்ள பிரச்னை காரணமாக மன உளைச்சலால் தற்கொலை செய்ய முயற்சி செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அவரை பத்திரமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மகாலிங்கம் ஜித்தேந்திரா மற்றும் ரயில்வே ஊழியர் பத்மநாபம் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மேலும், இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Video: 'உனக்கு ஆயுசு கெட்டி ராஜா' - தண்டவாளத்தில் நூலிழையில் உயிர்ப்பிழைத்த சாது!