ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 04.01.2022 அன்று முதல் தவணை கரோனா தடுப்பூசி பள்ளியில் செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட அன்றிலிருந்து மாணவி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாணவியின் பெற்றோர் மாணவியை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என தொடர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதில் மாணவிக்கு உடல் நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும், மாணவி 12ஆம் வகுப்பு படித்து வருவதால் அவரின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது என பெற்றோர் மிகுந்த வேதனை தெரிவித்தனர். மாணவியின் மேல்சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் சுகாதார உரிமைக்கான சட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்