வாக்குகளுக்காக பணம் மற்றும் பரிசுப்பொருள்களை வாக்காளர்களுக்கு வழங்குவதைத் தடுக்க, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி வசந்தம் அவன்யூ பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதன் அருகே பணபட்டுவாடா செய்யப்படுவதாக ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான இளம்பகவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சார் ஆட்சியர் இளம்பகவத், தேர்தல் பறக்கும் படையினர், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அதிமுக வேட்பாளர் பங்களாவின் சுற்றுச் சுவரில் இருந்து இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். எம் சுகுமாருக்கு தேர்தலுக்கு பணி செய்ய ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 27 நபர்களில் அவரும் ஒருவர் என்பதும், இந்த வேலையில் ஈடுபட மறுத்தால் அறைக்குள் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்துவதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த 27 பேரையும் கடந்த இரண்டு நாள்களாக பணப்பட்டுவாடா செய்வதற்காக பயன்படுத்தியுள்ளனர். அதில் ஒரு நபர் சுமார் 15 லட்சம் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாகவும், மாயமான நபரைக் கண்டுப்பிடிக்க அந்த குழுவில் உள்ளவர்களை பங்களாவில் அடைத்து வைத்து துன்புறுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
மேலும், சொகுசு பங்களா அருகே உள்ள முட்புதரில் சந்தேகத்திற்கிடமாக கிடந்த மூன்று பைகளை சோதனை செய்ததில் அதில் 91 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், சார் ஆட்சியருமான இளம்பகவத், அடைத்து வைக்கப்பட்டிருந்த 27 இளைஞர்களை காவல் துறை உதவியுடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.
அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.குமாரின் சொகுசு பங்களா அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் மீது ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு