ராணிப்பேட்டை: ரத்தினகிரி புகழ்பெற்ற பாலமுருகன் ஆலய தெப்பக்குளம் திறப்பினை முன்னிட்டு இன்று (பிப்.12) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தனகிரியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் புதிய தெப்பக்குளம் திறப்பினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ரத்தினகிரியில் பல ஆண்டுகள் பழமையான மிகவும் புகழ்பெற்ற ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அறுங்கோண தெப்பக்குளத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கி நடைபெற்று வந்தது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, குளம் முழுவதும் நீரால் நிரப்பப்பட்டு, இன்று வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நா.அசோகன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி IAS, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் IAS உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், இந்த விழாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: இலங்கை - தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: எல்.முருகன்