ராணிப்பேட்டை: ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பட்டு விவசாய சங்கத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் 450க்கும் மேற்பட்ட ஏக்கரில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டு வளர்ப்பு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பட்டுப்புழு வளர்ச்சித்துறையின் கீழ் அனுமதி பெற்று இயங்கும் தனியார் இளம்புழு விற்பனை மையத்தின் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் பட்டுப்புழுக்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த பட்டுப்புழுக்கள் இரண்டு நாட்களிலேயே வளர்ச்சியடையாமல் இறந்துபோய் உள்ளது. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட பட்டுப்புழு சங்கத்தின் மூலம் பட்டுப்புழுச் செடிகளுடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் மனு கொடுத்து தரமற்ற பட்டுப்புழு விற்பனை செய்த தனியார் விற்பனை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
பட்டுப்புழு விற்பனை மையத்தில் விநியோகம் செய்யும்போது, பட்டுப்புழுக்கள் நல்ல முறையில் இருக்கிறதா அல்லது தரமற்ற முறையில் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அதனை செய்வதில்லை, மேலும் புழுக்கள் வளர்க்கும் விசாயிகளிடத்தில் வாரத்தில் ஒரு முறை வந்து பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் தனியார் விற்பனை மையங்கள் இயங்குவதை நிறுத்தி, அரசுத் துறையின் மூலம் தரமுள்ள பட்டுப் புழுக்களை விற்பனை செய்ய வேண்டும்; மேலும் காஞ்சிபுரத்தில் மூடப்பட்டுள்ள அரசு இளம்பட்டு புழு விற்பனை மையத்தினை திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
தரமற்ற பட்டுப்புழு வழங்கியதால் ஆத்திரமடைந்த பட்டுப்புழு விவசாயி பூங்காவனம், தரமற்ற முறையில் இருந்தமையால் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டுப் புழுவை எரித்து வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் 450 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மல்பெரி செடிகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த விவசாயிகள், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் பல பகுதிகளில் தரமற்ற பட்டுப்புழு செடிகளை எரித்து விவசாயிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: உச்சம் தொட்ட தக்காளி விலை: கிலோ ரூ.110-க்கு விற்பனை... காரணம் என்ன?