தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் இல்லாததால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படும் என, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் இயங்கும் காவேரி கார்போனிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஐந்து மாவட்டங்களில் செயல்படும் அரசு, தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கோவிட் - 19 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை குறித்து தெரிவிக்க 04172 273188, 04172 273166 ஆகிய இரண்டு எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சாதியற்ற சமூகத்தைப் படைக்க அயோத்திதாசரின் தேவை என்ன?