சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 28) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 118 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்குக் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் சுதந்திர தின விழா உரையில், பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டது.
நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 35 ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை
மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட அம்மாவட்டத்திற்கு, ராணிப்பேட்டை நகரில் 28,711 சதுர மீட்டர் பரப்பளவில், 118 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையவுள்ளது.
இப்புதிய வளாகத்தில், வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கனிமவளத்துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.