ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகளை பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்சுனன் (26), அதே ஊரை சேர்ந்த சூர்யா(26), மதன், வல்லரசு, சௌந்தர்ராஜ் ஆகியோருடன் குருவராஜப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் நேற்று (ஏப். 07) நின்று கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு எதிரே நின்று கொண்டிருந்த தனது நண்பர்களை அழைத்துள்ளனர். இதற்கிடையே அவ்வழியே சென்ற பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் தங்களை தான் அழைக்கின்றனர் என்று தவறாக நினைத்து இவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, நேற்று இரவு 8 மணியளவில் அர்சனன், சூர்யா மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் பெருமாள்ராஜபேட்டைக்கு சமாதானம் பேசுவதற்காக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களை அழைத்துள்ளனர். அப்போது மீண்டும் இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கத்தி மற்றும் கம்பி உள்ளிட்டவற்றை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதில் சோகனூரைச் சேர்ந்த அர்சுனன் மற்றும் சூர்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மதன், வள்ளரசு, சௌந்தர்ராஜ் ஆகியோர் படுகாயத்துடன் திருத்தனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடலை மீட்ட காவல்தீறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையில் இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சோகனூர் மக்கள், நேற்று இரவு முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க பாதுகாப்பிற்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமாரின் அறிவுறுத்தலின்படி மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மதன்(37), அஜித்(24) ஆகிய இருவரையும் பிடித்துள்ளனர். தொடர்ந்து இதில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.