ராணிப்பேட்டை: அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கண்ணிகாபுரத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி ஆடிட்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் 25 சவரன் நகை மற்றும் ரூ.40,000 கொள்ளையடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்ப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், தற்போது நடைபெற்ற சம்பவம் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதே போன்ற ஒரு சம்பவம் திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து அதில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
12ஆம் வகுப்பு மாணவன் கைது
இது தொடர்பாக அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(டிச. 28) வடக்கு மண்டல காவல் துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், ”கடந்த அக்டோபர் 16ம் தேதி பாலவாய் பகுதியில் வசித்து வரும் ஆனந்த கிருபாகரன் மற்றும் அவரது மனைவி ரேணு ஆகிய இருவரையும் தாக்கி அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதே போல கடந்த டிசம்பர் 17ஆம் தேதி கண்ணிகாபுரம் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அதில் தொடர்புடைய வியாசபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னராசு (23) மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் தான் குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய ஏர் கன்(Air gun), ஆயுதங்கள், லேப்டாப், டிவி, கேமரா ஆகியவை முதற்கட்டமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது”,என்று தெரிவித்தார்.