ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது புதுக்காடு கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் விவசாயம் மட்டும் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமத்தில் நிலத்தை தோண்டினாலே குடிநீர் கிடைக்கும். ஆனால், தற்போது இங்கு இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீரில் உவர் தன்மை அதிகரித்துள்ளது.
அதனால் கிராம மக்கள் அங்கு கிடைக்கும் நீரை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு குடிநீர் வழங்குநர்களிடம் ஒரு குடம் நீர் பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய கிணறு தோண்டினாலும் உவர் நீர் மட்டுமே கிடைக்கிறது. இது தொடர்பாக கிராம மக்கள் ஒரு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது, ஒரு நாள் மட்டும் அலுவலர்கள் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்தனர்.அதன்பின், அதை நிறுத்தி விட்டனர்.
தற்போது பத்து ரூபாய்க்கு கூட குடிநீர் கிடைப்பது இல்லை. இதனால் அந்த உவர் நிரை பயன்படுத்தி நோய் ஏற்படும் சூழல் உள்ளதாக கிராமப் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிறுத்துவது இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர் 2 கிலோ மீட்டர் நடந்து அருகில் உள்ள மணக்குடிக்கு செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர்.
இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த சாந்தி கூறுகையில், எங்கள் ஊர் டிஸ்கவரி தொலைகாட்சியில் ஒளிபரப்படும் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது எனக் கூறுகிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் இக்கிராமப் பெண்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், இந்த பிரச்னையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு குடிநீர், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே யானை அட்டகாசம்: 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்