ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செய்யாமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பணன் மகன் நீதிதேவன் என்ற ஊமையன் (42). இவர் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பார்த்திபனூரிலிருந்து செய்யாமங்களம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது செய்யாமங்களம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவரது மனைவி வழிவிட்டாளிடம் (54) முன்விரோதம் காரணமாகத் தகாதமுறையில் பேசி தகராறில் ஈடுபட்டார்.
பின்னர், ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அவர் அருகில் கிடந்த கல்லைத் தூக்கி விழிவிட்டாளின் தலையில் போட்டு கொலைசெய்ய முயற்சித்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வழிவிட்டாளை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழிவிட்டாள் மகன் பிரபாகரன் அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் 29ஆம் தேதி ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் பதுங்கியிருந்த நீதிதேவனைக் கைதுசெய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வழிவிட்டாள் மருத்துவம் பலனின்றி சனிக்கிழமை (அக்டோபர் 2) உயிரிழந்தார். இதனையடுத்து அபிராமம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்