ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் மாலை 5மணிக்கு போர்ட் மெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று வழக்கம்போல் 5மணிக்கு கிளம்பி மாலை 5.30மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளது. அங்கிருந்து கிளம்பிய ரயிலின் கடைசி பெட்டியில் ஒருவர் ஓடி வந்து ஏறியுள்ளார். இதைப்பார்த்த ரயில் பரிசோதகர் அந்த நபரை கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர் அடுத்த ரயில் நிலையத்தில் மாறிக் கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் சில மாற்றுத்திறனாளிகள் ரயிலின் கடைசிப் பெட்டியாக உள்ள மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறுவதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பெட்டியின் கதவு மூடப்பட்டிருந்தது.
பின்பு பயணிகள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது பயணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இறந்த பயணி யார், எங்கிருந்து வந்தார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அறையில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை: காரணம் என்ன...?