ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சின்னவான் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர், கணேஷ் ராஜ்.
இவரைக் கடந்த 10 மாதங்களாக காணவில்லை என அவரது பெற்றோர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டது.
விசாரணை துரிதப்படுத்த உத்தரவு
மனுவை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், உடனடியாக காணாமல்போன கணேஷ் ராஜ் குறித்த வழக்கை துரிதப்படுத்த காவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது காணாமல்போன கணேஷ் ராஜின் நண்பர்களைப் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
குடிபோதையில் கொலை
விசாரணையில் குடிபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கணேஷ்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அவரது உடலை செம்மடம் அருகே உள்ள ரயில்வே டிராக் பின்புறம் புதைத்ததும் தெரிய வந்தது.
தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு
இந்நிலையில் இன்று (ஜூலை 15) ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில், ராமேஸ்வரம் வட்டாட்சியர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இருவர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு
மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முத்துசேரன், அஜித் மைக்கேல் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய சதீஷ் என்ற நபரைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
போதை வஸ்துகளுக்கு அடிமையாகி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களின் செயல் வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பூசாரிக்கு சாகும்வரை சிறை!