ராமேஸ்வரம் அருகே மண்டபம் அடுத்துள்ள வேதாளையில் இருந்து மன்னார் வளைகுடா கடல்வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்த இருப்பதாக மெரைன் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் பேரில் மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாளை கடற்கரைக்கு சரக்கு வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான மூட்டைகளை ஏற்றி வந்தது. அதை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக மஞ்சள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ஈரோட்டிலிருந்து மஞ்சள் ஏற்றி வந்து இலங்கைக்கு கடத்துவதற்கு முயன்றது தெரியவந்தது. பிறகு மஞ்சள் கடத்தி வந்த வெங்கடேஷ், ரியாஸ், சதொபுல்லா ஆகிய மூன்று பேர் மற்றும் மஞ்சள் ஏற்றிவந்த வாகனத்தை மெரைன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தப்பட்ட 1020 கிலோ மஞ்சளின் மதிப்பு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடத்தல்காரர்கள் மஞ்சளை கொடுத்து இலங்கையிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரயிருந்தது விசாரணையில் தெரியவந்தது.