ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு, ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக பிரத்யேக தொலைபேசி எண் மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருவாடானை துணை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் ஒன்பது சார்பு ஆய்வாளர் கொண்ட குழுவை உருவாக்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் திருவாடானை எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட், 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், அபுல் கலாம் ஆசாத், அருள்தாஸ் உள்ளிட்ட ஒன்பது பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், 'ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களைக் கடத்த இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பல்வேறுப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் திருவாடானை எல்லைப்பகுதியில் ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது பல்வேறு வகையான போதைப்பொருள்கள், செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து போதைப் பொருள்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாக ராமநாதபுரத்திற்குக் கொண்டுவரப்பட்டு தொண்டியில் உள்ள ஒருவர் மூலமாக, படகில் இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும்; அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டு இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 10 கோடி ரூபாய் வரையில் இருக்க வாய்ப்பிருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறி இருக்கின்றனர்' என்றார்.
பணம் ஈட்டும் நோக்கில் இதுபோன்ற வேலைகளில் பலர் ஈடுபடுவதாகவும்; இதுபோன்ற கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் கடுமையாய் சட்டம் பாயும் எனவும் வருண்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க... ரூ. 20 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்