ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கடலில் 1914ஆம் ஆண்டு 2.05 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டு கடந்த 105 ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பாம்பன் ரயில் பாலத்தை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது தூக்கு பாலம் வலுவிழந்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து 83நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக பக்தர்களும் பெருமளவில் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 27 அன்று மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் மோடி பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தின் மூலம் கடலில் மண் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
பின்னர் கடந்த மார்ச் 1ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி புதிய பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்நிலையில் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் முதன்மை நிதி இயக்குநர் ஏ.கே. சௌத்திரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கே.ரெட்டி தலைமையிலான அலுவலர்கள் நேற்று புதிய ரயில் பாலம் அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.
இது குறித்து முதன்மை நிதி இயக்குநர் ஏ.கே செளத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது பாம்பன் கடலில் உள்ள ரயில் பாலத்தின் அருகே 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்பதற்கான டெண்டர் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, இரண்டே வருடத்தில் பாலம் கட்டிமுடிக்கப்படும்.
இந்த புதிய பாலம் 141 தூண்களையும், 140 கர்டர்களையும் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி நடுவில் உள்ள தூக்குப்பாலம் 20 மீட்டர் உயரம் தூக்கும் அளிவில் இருக்கும் என்றார்.
இதையும் படிங்க:பாம்பன் பாலத்தில் பழைய இரும்பு கர்டர்களை மாற்றும் பணி தொடக்கம்!