ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா, பாக் நீரிணைப்பு கடற்பகுதிகளில் தமிழ்நாட்டோடு ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. மேலும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.
பாலத்தின் மத்தியில் பாக் ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தூக்குப் பாலமும் உள்ளது.
பாம்பன் ரயிலின் தூக்குப் பாலத்தில் நேற்றிரவு திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனை சரி செய்த பிறகு சென்னையிலிருந்து ஐஐடி குழுவினர் ஆய்வுசெய்த பின்னரே மீண்டும் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனால் இன்று சென்னை மற்றும் திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு, திரும்ப மண்டபத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.