ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் பாம்பன் கடலில், 2.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 1914 ஆம் ஆண்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பாலத்தின் உறுதித் தன்மை குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதே வழித்தடத்தில் புதிதாக 250 கோடி ரூபாய் செலவில் ரயில் பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இதுவரை 62-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அமைக்கப்படும் தூண்களில், 77 ஆவது தூண் காற்றின் வேகம் மற்றும் நீரோட்டத்தின் காரணமாக, இன்று(நவ.7) பழைய பாம்பன் ரயில் பாலத்தின் 112 ஆவது தூணின் மீது மோதி நின்றது. இதனையறிந்த அலுவலர்கள் உடனடியாக நாட்டுப் படகின் மூலம், கீழே விழுந்த தூணை நீரோட்டத்தின் பக்கமாக இழுத்து, தென் கடலின் கரைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்த அலுவலர்கள் கூறுகையில், காற்றின் வேகம் மற்றும் நீரோட்டத்தின் காரணமாக டேங்கர் மிதவையுடன் இருந்த தூண் நகர்ந்து பாம்பன் பழைய பாலத்தின் மீது சாய்ந்தது. இந்தத் தூண் மீண்டும் கடல் பகுதியில் வைக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் மிதவை கிரேன் ஒன்று பாலத்தின் மீது மோதியதால், மூன்று நாள்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போடி 18ஆம் கால்வாய் நீட்டிப்பில் தண்ணீர் திறந்து வைத்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ்