ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், " தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் வாரம்தோரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று (அக்.10) ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 46 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசியும், 19 லட்சம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசி என 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவுள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
ராமநாதபுரத்தில் தடுப்பூசி சராசரியைவிட குறைவு
தமிழ்நாட்டில் 64 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 24 விழுக்காடு மக்கள் செலுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட நான்கு மெகா தடுப்பூசி முகாம்களிலும் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
59.19 % பேருக்கு முதல் தவணையும், 18.74% பேருக்கு இரண்டாம் தவணையும் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது. இது மாநில சராசரியைவிட குறைவு. இதை அதிகப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து
இன்று ஒரே நாளில் 670 இடத்தில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை மேலும் 50 இடங்கள்
தமிழ்நாட்டில் 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சுத்தமான நீரில் வளரும் ஏடிஎஸ் கொசு வகையை கண்டறிந்து அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பரவும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 4 ஆயிரத்து 900 செவிலியர்கள் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக நியமிக்கப்படவுள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 100 இடங்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி கிடைத்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டடத்திலுள்ள குறைபாடுகளை சீர் செய்து அதற்குரிய ஆவணத்தை ஒன்றிய அரசிடம் வழங்கியுள்ளளோம். மேலும் 50 இடங்களை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு