ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த 150-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் யாருக்கும் பயனின்றி கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
இலங்கை கடற்படையினர் கடந்த 6 ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றி, 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.
மீட்கும் நிலையில் 47 படகுகள்
பின்னர் மீனவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொண்ட பரிந்துரையால், 2015ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகளில் அந்நாட்டுக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 173 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
இதனைத்தொடர்ந்து அப்படகுகளின் நிலையை அறிய இலங்கை சென்ற மீனவர் குழு, அங்கிருந்த படகுகளை ஆய்வு செய்தது. இதில் 47 படகுகள் மட்டும் மீட்கும் நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
அழிப்பதற்கும், ஏலம் விடுவதற்கும் உத்தரவு
இதனையடுத்து, அப்படகுகளை மீட்டுவர அப்போதைய தமிழ்நாடு அரசு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் 35 படகுகள் மட்டும் மீட்கப்பட்டன. மீட்கப்படாத எஞ்சிய படகுகள் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் இந்த இறங்கு தளங்களைப் பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள், தங்கள் படகுகளை நிறுத்த இடமில்லை எனப் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக இலங்கை மீன்வளத்துறையினரால் தொடரப்பட்ட வழக்குகள் மன்னார், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்தன.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 94 படகுகள், மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 27 படகுகள் என மொத்தம் சேதமடைந்த 121 விசைப்படகுகளை அழிப்பதற்கும், ஏலத்தில் விடப்படுவதற்கும், நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
கேட்பாரற்றுக் கிடக்கும் படகுகள்
இதையடுத்து இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 130-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் படகுகளை ஏலம் விட்டோ அல்லது விற்பனை செய்தோ, அந்தத் தொகையினை தங்களுக்கு வழங்கிட கேட்டுக்கொண்டனர்.
ஆனால், கிராஞ்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் 18 படகுகளில் 9 படகுகள் சேதமடைந்து இருப்பதால், அவற்றை உடைக்க, மன்னார் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தற்போது வரை மீதமுள்ள படகுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இலங்கை துறைமுகங்களில் தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
இதையும் படிங்கள்: மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல்