ராமேஸ்வரம்: இன்றும் நாளையும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக ராமேஸ்வரத்திலிருந்து நான்கு படகுகளில் 80 பேர் இன்று (மார்ச்.11) காலை, அத்தீவிற்குப் பயணம் மேற்கொண்டனர்.
வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன.
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோணியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படுகின்றது. தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும், இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடக்கிறது.
விழாவின் 2ஆவது நாளான நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். பின்னர் 9 மணியுடன் திருப்பலி முடிந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகின்றது. திருவிழாவையொட்டி, மண்டபம் முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 3 கப்பல்களும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று முதலே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.