ராமேஸ்வரம்: இலங்கையைச் சேர்ந்த 24 வயது நபரான கசன்கான் அத்துமீறி இந்தியாவில் நுழைந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து நாள்தோறும் அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அக்டோபர் 8ம் தேதி தனுஷ்கோடி அருகே ஐந்தாம் மணல் தீடையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைக்குழந்தையுடன் தஞ்சமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தங்களுடன் ஆறாவதாக மேலும் ஒரு நபர் வந்ததாகவும். இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதால் கடலில் குதித்துவிட்டார் என்றும் கூறியுள்ளனர். இதனால் துணுக்குற்ற போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இது ஒருபுறமிருக்க மண்டபம் அகதிகள் முகாமிற்கு அக்டோபர் 9ம் தேதி இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் தான் கடலில் குதித்த கசன்கான் என்கிற அஜய் என்பது தெரிய வந்தது. மேலும் கடலில் குதித்த நபர் பத்திரமாக கரை சேர்ந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாக்குமூலம் அளித்த கசன்கான் 13 கிலோமீட்டர் நீந்தியே தனுஷ்கோடி கடற்கரை வந்ததாகவும். அங்கிருந்து சரக்கு லாரியில் ராமநாதபுரம் வந்து, குத்துக்கல் வலசையில் உள்ள தனது தாத்தா முனியாண்டி வீட்டுக்கு சென்று தங்கியதாகவும் கூறியுள்ளார். பின்னர் தனது தாத்தவின் அறிவுரைப்படி அகதிகள் முகாமிற்கு வந்ததாக கசன்கான் கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்திய கடலோர காவல் படை, தமிழக மரைன் போலீசார், மத்திய, மாநில உளவு போலீசார் பாதுகாப்பு என இத்தனை கண்காணிப்புகளையும் தப்பி, கசன்கான் கடலில் நீந்தி வந்தது சாத்தியமா? 13 கிலோ மீட்டர் தூரம் கடலில் எவ்வித பயிற்சியும் இன்றி நீந்துவது சாத்தியமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் கசன்கான் தமிழகம் வந்தடைய வேறு யாரேனும் உதவி செய்தார்களா? யாரையும் காப்பாற்றுவதற்காக கசன்கான் பொய் சொல்கிறாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.