இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோரக் காவல்படை எல்லைக்கு உட்பட்ட மணாலி புட்டி தீவு அருகே இலங்கைக்கு சொந்தமான பைபர் படகு ஒன்று இன்ஜின் இல்லாமல் மர்மமான முறையில் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் கடலோரக் காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலோரக் காவல்படை, சுங்கத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த படகின் மீது OFRPA 4624 PTM என்கிற எண்ணும், 'சீ ஷெல் மரைன் சின்னக் குடியிருப்பு கல்பிட்டி ' என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
![இலங்கை படகு இராமநாதபுரம் தீவிரவாதிகள் ஊடுருவல் கடலோர காவல் படையினர் srilankan fiber boat ramanathapuram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-1-srilankan-plastic-boat-near-mandapam-island-pic-script-7204441_31082019075118_3108f_1567218078_15.jpg)
இதன் பின்னர் தீவு முழுவதையும் சோதனையிட்டு பின் படகை கைப்பற்றி மண்டபம் சுங்க அலுவலத்தில் நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் இருந்து யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா என்ற கோணத்தில் கடலோரக் காவல்படையினர் தீவுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் மத்திய உளவுத்துறை இலங்கை வழியாக ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மண்டபம் தீவு அருகே இலங்கையைச் சேர்ந்த படகு கரை ஒதுங்கி இருப்பது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.