ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்றாட அத்தியாவசியப்பொருட்கள்கூட வாங்க முடியாமல் நாள்தோறும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி, அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக ஏற்கெனவே 59 நபர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக 15 பேர் வந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கைத்தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். அதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை மிக அதிகமாகவும்; அப்பொருட்களின் தட்டுப்பாடும் நிலவுவதால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதுகாப்பையும் மீறி, உயிரை பணயம் வைத்து பல்வேறு கட்டங்களாக இன்று வரை 74 பேர் அகதிகளாக தமிழ்நாடு நோக்கி வந்துள்ளனர்
இன்று அதிகாலை குழந்தைகளுடன் 15 பேர் தனுஷ்கோடி அருகே மணல்திட்டில் நீர், உணவின்றி அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த இலங்கைத்தமிழர்களை இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் மீட்டனர். இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று குழந்தைகள் உட்பட 15 பேர் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலங்கையிலிருந்து ஒரே நாளில் 19 இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வருகை