ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (செப் 20) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அப்போது நேற்று (செப். 20) மாலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி, வெவ்வேறு திசைகளில் தங்களது படகுகளை இயக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (செப் 21) காலை மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களைக் கொண்டு வீசி விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், விசைப்படகில் இருந்த மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதாகக் கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுமட்டும் அல்லாது நடுக்கடலில் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பி உள்ளதாக கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: 'அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட கோரி வழக்கு’ - மாநில கடலோர மண்டலம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!