ராமநாதபுரம்: சமீப காலமாகவே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீனவர்களை கைது செய்வதும் அதன்பின் தமிழ்நாட்டில் இருந்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி மீட்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின் தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 5 விசைப்படகையும் அதிலிருந்து 38 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடரந்து, அந்த 38 மீனவர்களுக்கும் இன்று சிறை காவல் முடிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி, 38 பேர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். தற்போது விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.