ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சமூக நலம் மற்றும் சத்துணவு, குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன், சதன் பிரபாகர், ராமநாதபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனையடுத்து அமைச்சர் சரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வீட்டிலேயே முட்டை வழங்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த ஆணை கிடைத்ததும் முதலமைச்சர் பழனிசாமி வழிகாட்டுதலின்படி, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று முட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுகளில் 1.10 லட்சம் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.133.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ரூ. 1,000 கரோனா நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளையும் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு, அவர்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் மேலும் ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். தற்போது 29.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் ரத்த சோகை இல்லாத குழந்தைகளை உருவாக்க 2 ஆண்டுகள் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்' என்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் பங்கேற்றனர். இதனால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.