ராமநாதபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் உள்பட 14 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 14ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரையிலிருந்து 43 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது சிங்கப்பூரிலிருந்து வந்த சரக்குக் கப்பல் மீனவர்களின் படகில் மோதியது.
இதில் படகு சேதமடைந்து நீரில் மூழ்கியது. படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். அப்போது படகின் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய இருவரையும் கப்பல் ஊழியர்கள் உயிருடன் மீட்டனர்.
மேலும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் கப்பல், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (38), இவரது மாமானார் மாணிக்தாசன் (60), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட வேல்முருகன் கடந்த 15ஆம் தேதி கன்னிராஜபுரத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார். கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பழனிவேல், வேதமாணிக்கம், பாலமுருகன் உள்ளிட்ட மாயமான ஒன்பது மீனவர்கள் தேடப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி பழனிவேல் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. அதன்பின் மங்களூரில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (ஏப். 17) சொந்த ஊரான கன்னிராஜபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் பழனிவேலின் மனைவி, 4 குழந்தைகள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் தகனம்செய்யப்பட்டது.