ராமநாதபுரம்: பழங்குளம் அருகே மரப்பாலம் பகுதியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முனீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் காளவாசல் இயங்கி வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டம் புலவர் மருதங்குடி பகுதியைச் சேர்ந்த பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அவர்களின் குழந்தைகளும் தங்கியுள்ளனர்.
இதில், கார்த்தி என்பவரது மகள் 7 வயது சிறுமி, பேராவூர் முக்கிய சாலையிலுள்ள பெட்டிக்கடைக்குச் சென்று மிட்டாய் வாங்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து குறுகலான பாதையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது மோதியது.
காவல் துறை விசாரணை:
இதில், சக்கரத்தில் சிக்கிய சிறுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்சியடைந்த டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெயிண்ட் லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!