ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குரூப் கம்பெனி ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அளித்துவந்தன.
ஆன்லைன் மூலமாக நடந்த பயிற்சி வகுப்புகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதுமட்டுமின்றி, செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கு நேரடி செயல்வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முடிவில் மாணவர்களால் 100 விதமான செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டன. சுமார் 12 கிராம் முதல் 60 கிராம்வரை எடை கொண்ட அந்த செயற்கைக்கோள்கள் இன்று ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானத்தில் ராட்சத ஹூலியம் பலூன் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது.
செயற்கைக்கோள்களுடன் கூடிய பலூன் ஏவுதல் நிகழ்ச்சியை தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரமோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் தலைவர் சிவதாணுபிள்ளை மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் குறைவு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு தேவையான தகவல் பெறும் வகையில் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டதாக அரசு பள்ளி மாணவி ஜெய லெட்சுமி தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியா மேலும் 7 தடுப்பூசிகளை தயாரிக்கிறது: ஹர்ஷ் வர்த்தன்