ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ‘வயா’ என்ற தனியார் நிதி நிறுவனம், கடந்த ஒரு வருடத்திற்க்கும் மேலாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிதி நிறுவனத்தின் அருகேயுள்ள கிராமப்புற மக்களுக்கு கடனுதவி அளித்து, மாதந்தோறும் அவர்களிடமிருந்து சிறிய தொகையாக வசூல் செய்து வருகின்றனர்.
தினசரி வசூலாகும் பணத்தை தங்களது நிதி நிறுவனத்தில் லாக்கரில் வைத்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்று (அக்.04) வசூல் செய்த 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை லாக்கரில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர், இன்று (அக்.05) வழக்கம்போல் நிறுவனத்திற்கு வந்த பணியாளர்கள், நிறுவனத்தில் உள்ளே சென்று பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, லாக்கரிலிருந்த 8 லட்சத்து 48 ஆயிரத்து 745 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். மேலும், நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் காவல் துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா வாங்குவதற்காக கோயில் உண்டியலில் கைவரிசை காட்டிய சிறுவர்கள்!