ராமநாதபுர மாவட்டத்தில் சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றின் கட்டடப் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்ய மருத்துவ கல்வியில் கூடுதல் துணை இயக்குநர் சபிதா தலைமையிலான மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.
இந்தக் குழுவில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் விமலா மற்றும் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினரும் கட்டுமான சிறப்பு அலுவலருமான ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இந்த குழு இன்று ராமநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவ கல்லூரியின் கட்டட பணியை நேரில் ஆய்வு செய்தது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய சபிதா, தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள 11 மருத்துவ கல்லூரிகளின் கட்டடப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளோம். தற்போது, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரத்தில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணியை ஆய்வு செய்து வருகிறோம்.
ராமநாதபுரத்தில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரோனா காலகட்டத்திலும் கூட வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணி முடிவதற்கு இன்னும் ஒன்பது மாத காலங்கள் உள்ளன. அதற்குள்ளாகவே கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசின் குழு வந்து நேரில் மருத்துவக் கல்லூரி பணிகளை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். ஆய்வின் போது இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் அல்லி உடன் இருந்தார்.