ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துப்படும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் 90 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படும் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். தொடர்ந்து ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில்வே பாதை திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், "ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் துவங்க உள்ளதாகவும், பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு வரைபடங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் போன்ற பெரிய சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுக்கு என தனித்தனி முனையங்கள் அமைய இருப்பதாகவும், விசாலமான வாகன நிறுத்தம், இரண்டு மாடி ரயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.