ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையம் மதுரை - ராமேஸ்வரம் ரயில்வே பிரிவில் உள்ள ஒரு முக்கியமான ரயில் முனையம் ஆகும். இந்த ரயில் நிலையம் புறநகர் இல்லா ரயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறது. இந்த ரயில் நிலையத்தைத் தினந்தோறும் சராசரியாக 9,000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பாம்பன் தீவில் உள்ள இந்த ரயில் நிலையம் இலங்கை மன்னார் தீவிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ரயில் நிலையத்திற்கான மறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூபாய் 90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன.
ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு ரயில் நிலைய கட்டிடம் உருவாக இருக்கிறது. ராமேஸ்வரம் கோவில் கோபுர அமைப்புடன் நவீன கட்டிடக்கலை அம்சத்துடன் ரயில் நிலைய கட்டிடம் அமைய இருக்கிறது. கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் இரு மாடிக் கட்டிடம் அமைய இருக்கிறது. இந்த கட்டிடத்தில் பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள், 4 மின்தூக்கிகள் அமைய உள்ளன. ரயில் நிலையத்திற்குக் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளுக்கு தனித்தனியாகப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைய உள்ளன. வாகனங்கள் வந்து செல்ல தனிப்பகுதியும், இருபுறமும் தூண்களுடன் பாதசாரிகள் நடந்து செல்ல ராமேஸ்வரம் கோவில் பிரகார அமைப்பில் நடைபாதை அமைய இருக்கிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியுடன் கூடிய காப்பகங்கள், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகம், ஓய்வு அறைகளுடன் கூடிய உபரயில்நிலையை கட்டிடங்கள், ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டுப் பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன.
இதையும் படிங்க:சாலை விபத்தில் மாரடைப்பா? உயிரிழப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம்!