ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை மீன்வளத் துறை அலுவலகத்திலிருந்து பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர்.
இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி இரட்டைமடி வலைகளைத் தொடர்ந்து பயன்படுத்திவருவதால் மீன்வளம் அழியும் இடர் ஏற்படுகிறது.
விசைப்படகுகள் மீது புகார்
இதையடுத்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, தொடர்ந்து இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்திவந்த 13 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அனுமதிச் சீட்டு ரத்து
இதையடுத்து இன்று (ஜூலை 21) மீன்வளத் துறை அலுவலர்கள் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்திவந்த 13 விசைப்படகுகளுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை ரத்துசெய்துள்ளனர்.
மேலும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏதும் வரக்கூடும் என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ரேசன் அரிசி பறிமுதல்'