தமிழ்நாடு முழுவதும் மீன்களின் இனப்பெருக்கத்தை கணக்கில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா பரவல் முழு ஊரடங்கு காரணமாக விசைப்படகுகளை செப்பனிடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மேலும், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மீனவர்கள் மும்மரம் காட்டிவந்தனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் ஜூன் 30ஆம் தேதியிலிருந்து மீன்பிடிக்க அதாவது 75 நாள்களுக்குப் பிறகு நாளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்ல உள்ளனர்.
இவர்கள் இன்று விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தேவையான வலைகள், பெட்டிகள், ஐஸ் போன்ற பொருள்களை ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 75 நாள்களுக்குப் பிறகு கடலுக்கு செல்வதால் நல்ல மீன்வரத்து கிடைக்கும் எனவும் மீனவர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர்.