ராமநாதபுரம்: கடந்த மார்ச் 23ஆம் தேதி கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடைசெய்யப்பட்டது. பின்னர் ஊரடங்குகளில் தளர்வுகளை அளித்து பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி அக்னி தீர்த்த கடற்கரையில் குளிக்கவும், கடற்கரையில் பூஜை செய்யவும் தடை இருந்தது. இந்நிலையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று கார்த்திகை சர்வ அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பொதுமக்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால், உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், கரையில் பூஜை செய்தும் உற்சாகமாக நீராடிவருகின்றனர்.
இருந்தபோதிலும் தற்போதுவரை கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தடை நீட்டிக்கப்பட்டுவருகின்றது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் தீர்த்தம் குளிக்க முடியாத சூழ்நிலையில் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, அரசு கோயிலுக்குள்ளே தீர்த்த கிணறு திறக்க வழி செய்யுமாறு பக்தர்களும், யாத்திரை பணியாளர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 8 மாதங்களுக்குப் பின் மெரினாவில் பொதுமக்கள்!