ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில், தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகள் உள்பட அனைத்து யானைகளும் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்ளும்.
அந்த வகையில் புத்துணர்வு முகாம் நாளை தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் யானை ராமலட்சுமி, பாகன் ராமுவுடன் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக கோயில் யானை ராமலட்சுமிக்கு கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
முகாமில் கலந்துகொள்வதற்காக செல்லும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி இதுவரை எட்டுமுறை புத்துணர்வு முகாமில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
முகாமுக்கு செல்லும் யானை ராமலட்சுமி மற்றும் பாகன்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானையை ஏற்றிச்செல்லும் லாரி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.