ராமநாதபுரம்: அச்சுந்தன் வயல் அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுவாமிநாதன் - விஜயகுமாரி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது மகள் ராகினி(2).
குழந்தை ராகினி, சில நாட்களாக உணவு உண்ண மறுத்துவருகிறார். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் ராகினியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ராகினிக்கு அரியவகை மரபணு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த நோய்க்கான சிகிச்சை பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். நோயைக் குணப்படுத்த சுமார் 38 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் பெற்றோரிடம் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த ராகினியின் பெற்றோர் குழந்தையின் உயிரை காப்பாற்ற நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என, ராகினியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
"அனைத்து மக்களுக்கும் உதவிவரும் முதலமைச்சர் எனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்தால் சாகும்வரை அவரை மறக்க மாட்டேன். எங்களுக்கு அவர் உதவ வேண்டும்" என ராகினியின் தாய் கோரிக்கை விடுக்கிறார்.
இதனையும் படிங்க: கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் திறப்பு