ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்புகளை அதிகரித்திடும் நோக்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக 429 ஊராட்சிகளில் "1000 குறுங்காடுகள்” வளர்க்கும் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்துணவுடன், ஊட்டச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் வழங்கிடும் நோக்கில் பள்ளி வளாகங்களில் காய்கறி, கீரை வளர்ப்பை ஊக்குவிக்க 1000 கிச்சன் கார்டன் அமைக்கும் பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மரக்கன்றுகள் சரணாலயம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.
100க்கும் மேற்பட்ட பாரம்பரிய மரக்கன்றுகள்
குறிப்பாக மஞ்சள், கடம்பு, பரம்பை, குமிழ், மலை அரளி, இச்சி மரம், நாட்டு அத்தி, நறு உளி, பதிமுகம், பன்னீர், இலுப்பை, கருவாகை, கள்ளி மந்தாரை, வெண் மந்தாரை, ருட்ராட்சம், பூ மருது, நீர் மருது, மகிழம்பு, புங்கன், புன்னை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியபோது, “நமது பாரம்பரிய மரக்கன்று வகைகளை சரியான முறையில் பராமரித்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவது நமது கடமை. பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் மரக்கன்றுகள் பராமரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் ” என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.