ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் தெற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து சிலர் இலங்கைக்கு தப்பிச் செல்ல இருப்பதாகக் கியூ பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு செய்த சோதனையில் சுதாகரன், சந்திரமதி, ஹரிஷ் கரன், உதயகுமார், சதீஷ், டிக்சலா ஆகிய ஆறு பேரை கைது செய்து ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் துறையினர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்பு, தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8500 ரூபாய் மதிப்பிலான இலங்கை நோட்டுகள், இந்திய ரூபாய் நோட்டுகள் 1000, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையினர் வைத்துள்ளனர்.
இலங்கை செல்வதற்கு ரூ.40,000 ரொக்கமாகப் படகில் செல்ல ஏற்பாடு செய்தவருக்கு கொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான ஏற்பாடு செய்தவர் குறித்து தற்போது தனுஷ்கோடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. எதற்காக இந்த ஆறு பேரும் கடல் வழியாகத் தப்ப முயன்றனர் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது!