இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (டிச.01) ராமநாதபுரம் மாவட்டக் கடலோர கிராமங்களான பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளுக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பாக, பாம்பன் கடற்கரைப் பகுதி, பாம்பனில் உள்ள பாதுகாப்பு மையம், தங்கச்சிமடம் அருகே உள்ள அய்யன்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலப் பகுதியானது புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 02.12.2020 முதல் 05.12.2020 வரையிலான நாள்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிக வேகத்துடன் காற்று வீசக்கூடும் எனவும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமையில் மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அவசரகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டடங்கள் உள்பட திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாம்பன் கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்களின் மீன்பிடி படகுகளை வடகடல் பகுதியிலிருந்து பாம்பன் தூக்கு ரயில்பாலம் வழியாக தென்கடல் பகுதிக்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று நிறுத்திட மாவட்ட நிர்வாத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 15 மண்டல அளவிலான குழு அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து விழிப்புடன் களப்பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அந்தந்த வார்டு தலைவர்கள் ஆட்டோ ஒலிப்பெருக்கிகள் மூலம் கரையோரம் வசிக்கும் மக்களை திருமணம் மண்டபத்தில் தங்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:புரெவி புயல்: தென்காசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!