தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (மே.10) முதல் மே.24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்துக் கடைகளும் இன்றிரவு 9 மணி வரை இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
ராமநாதபுரம்:
பாரதி நகர் மீன் மார்க்கெட்டில் தகுந்த இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதால்,அலட்சியமாக பொதுமக்கள் நடந்துகொள்வதைத் தவிர்க்க அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
திண்டுக்கல்:
கடந்த சில நாட்களாக மீன்கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், நாளை(மே.10) முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்று (மே.09) மீன்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நெத்திலி, மத்தி, பாறை, வெளவால் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் வாங்கிச் சென்றனர்.
நீலகிரி:
குன்னூரில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் கடைகளில் குவிந்தனர். குறிப்பாக மார்க்கெட், மவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க வந்தவர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாததால், கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம், மவுண்ட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரில் கடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். ஜவுளிக்கடைகளில் அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது. பெரிய கடை வீதி வண்டிக்கார தெரு, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறை போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகளுக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்!