இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசையைச் சேர்ந்தவர் நஜிமா(எ)வள்ளி. இவர் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அசோக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் வள்ளியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் கள்ளத் துப்பாக்கி தோட்டக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிகள் இலங்கையில் இருந்து கடத்திகொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் வள்ளியைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவருக்கு கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்தது தருமபுரியைச் சேர்ந்த அருண்(28), கோவையைச் சேர்ந்த சங்கர் ராஜ்(33) மற்றும் மணிகண்டன்(32) என்பது தெரியவந்தது. பின்னர் இந்த 3 பேரையும் சிறப்புத் தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் மாவட்டத்தின் இரண்டாவது உரிமையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரனை நீதிபதி ஆர்.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.